
சென்னை:
இளம்பெண் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொன்று புதைத்தது தெரிய வந்தது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க மனைவியை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியதாக அவர் போலீசில் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த காளிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (32). சென்னையை அடுத்த படப்பையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (23). மனைவியை சொந்த ஊரான காளிபாளையத்திலேயே விட்டுவிட்டு, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, கல்லூரிக்கு நடராஜன் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 6ம் தேதி சேலத்தில் தோழி வீட்டு திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விஜயலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என பரமத்திவேலூர் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். அதேநேரத்தில் வரதட்சணை கேட்டு நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயலட்சுமியை கடத்தி சென்றுவிட்டதாக அவரது தந்தை சுப்பிரமணி யனும் புகார் அளித்தார். 3 தனிப்படை அமைத்து விஜயலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். நடராஜனிடமும் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி நாமக்கல் கோர்ட்டில் நடராஜன் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை நடராஜன் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
மோகனூர் அருகில் உள்ள அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமியுடன் நடராஜனுக்கு 2010ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நடந்தது. விஜயலட்சுமி ஆசிரியை வேலைக்காக காத்திருந்தார். அவரை சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு நடராஜன் மட்டும் பூந்தமல்லி அருகில் உள்ள காட்டுப்பாக்கத்தில் தனியாக வசித்தார். அவருக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.
மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்இ முடித்துவிட்டு பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர் குப்பம் தனியார் கல்லூரியில் முதலில் வேலை செய்துள்ளார். பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் கல்லூரி நிர்வாகம் நடராஜனை வேலையைவிட்டு நீக்கிவிட்டது. இதையடுத்து படப்பைக்கு வந்துள்ளார். அந்த கல்லூரியிலும் பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.
ஊருக்கு செல்லும்போதெல்லாம் விஜயலட்சுமியை வக்கிரமான முறையில் செக்ஸில் ஈடுபட கட்டாயப்படுத்தி உள்ளார். இது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
மனைவியை நடராஜன் வெறுக்க தொடங்கி னார். அவரை சென்னைக்கு அழைத்து செல்லாமல் காலம் கடத்தி வந்தார். ஆனால் விஜயலட்சுமியோ, தன்னை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 6ம் தேதி விஜயலட்சுமிக்கு போன் செய்த நடராஜன், ‘சேலத்தில் தோழி திருமணத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்னைக்கு வா என கூறியுள்ளார். அதன்படி விஜயலட்சுமியும் சென்னை சென்றுள்ளார். நடராஜன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற விஜயலட்சுமிடம் ‘நீங்கள் யார்? என வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார்.
நான்தான் நடராஜனின் மனைவி என கூறியிருக்கிறார். ‘அப்படியானால் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த பெண் யார்? என வீட்டு உரிமையாளர் கேட்டுள்ளார். அப்போதுதான் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது விஜயலட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து கணவரிடம் கேட்டு விஜயலட்சுமி சண்டை போட்டுள்ளார். 3 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தியது கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லு£ரி மாணவி என்பதும் அந்த மாணவி தற்போது பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவது தெரியவந்தது. கணவரிடம் கோபித்து கொண்டு விஜயலட்சுமி ஊருக்கு புறப்பட்டார். ஊருக்கு சென்றால் கள்ளக்காதல் விவகாரத்தை தனது பெற்றோரிடம் கூறிவிடுவாள் என பயந்த நடராஜன் மனைவியை கொல்ல திட்டமிட்டார். அவரை சமாதானப்படுத்தி வீட்டில் தங்க வைத்துள்ளார். 2 நாள் கழித்து இரவு நேரத்தில், வாக்கிங் செல்லலாம் என கூறி மனைவியை காட்டுப்பாக்கம் செல்லியம்மன் நகர், கிருஷ்ணா கால்வாய் மணல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றபோது, தயாராக வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை குத்தியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்துள்ளார்.
முதல் நாள் இரவே வெட்டி வைத்திருந்த குழியில் மனைவியின் சடலத்தை போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். கடந்த மாதம் 6ம் தேதி மனைவியை கொலை செய்துவிட்டு தன் மேல் போலீசார் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக 8ம் தேதி மனைவியை காணவில்லை என நாடகமாடி, போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசாரின் சந்தேகம் தன் மீது திரும்பியது தெரிந்ததும் கோர்ட்டில் சரண் அடைந்து விட்டதாக வாக்குமூலத்தில் நடராஜன் கூறியுள்ளார். பரமத்திவேலூர் டிஎஸ்பி உதயகுமார், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார், நடராஜனை நேற்று சென்னை அழைத்து வந்தனர்.
விஜயலட்சுமி சடலத்தை இன்று தோண்டி எடுத்து பூந்தமல்லி தாசில்தார் வளர்மதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்வார்கள் என்று தெரிகிறது.


.jpg)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.