ஆந்திராவில் தியான மையம் நடத்தும் சாமியார் ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கட்தால் என்ற இடத்தில் 65 வயது மதிக்கத்தக்க சுபாஷ் பத்ரிஜி என்ற சாமியார் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தியான மையம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இங்கு பிரமிடு வடிவில் பிரமாண்டமான தியான மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கர்னூல் மாவட்டம் ஜெகநாதகட்டு என்ற இடத்திலும் இவர் தியான மையம் நடத்தி வருகிறார்.
கட்தாலில் உள்ள மையத்தில் தியானம் கற்றுக்கொள்வதற்காக ஆந்திராவில் இருந்து மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வார்கள். இங்கு நடந்த தியான விழாவுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலரும் வந்து இருக்கிறார்கள்.
இந்த தியான மையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை உலக தியான மகாசபை கூட்டங்கள் நடைபெற்றன.
இங்கு நடந்த தியான நிகழ்ச்சியை தனியார் செய்தி சேனல் ஒன்று ரகசியமாக படம் பிடித்து டெலிவிஷனில் ஒளிபரப்பியது. தியானத்துக்கு வந்த பெண்களை சாமியார் சுபாஷ் பத்ரிஜி கட்டி அணைப்பது, முத்தமிடுவது, மடியில் உட்கார வைப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாயின. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தியானம் என்ற பெயரில் சாமியார் ஆபாசமாக நடந்து கொண்டதை பார்த்த கட்தால் பகுதி மக்கள் ஏராளமான பேர் தியான மையத்தின் முன்பு திரண்டு சாமியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பிய செய்தி சேனலின் கேமராமேன் மற்றும் ஊழியர்களை தியான மையத்தின் நிர்வாகிகள் அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து, அந்த டி.வி. நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் பத்ரிஜி சாமியார் மற்றும் தியான மைய நிர்வாகிகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதை அறிந்ததும் சாமியாரும், தியான மைய நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சாமியார் சுபாஷ் பத்ரிஜி பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விதம் குறித்து பெண்கள் புகார் செய்ததையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மகபூப்நகர் மாவட்ட கலெக்டர் கிரிஜா சங்கர், போலீஸ் சூப்பிரண்டு நாகேந்திர குமார் ஆகியோருக்கு ஆந்திர மாநில உள்துறை மந்திரி சபிதா இந்திராரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.
இதேபோல் சோமராஜூ என்ற வக்கீல் மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்து இருக்கிறார். அதன்பேரில் சாமியார் சுபாஷ் பத்ரிஜியின் தியான மையத்தில் நடந்த என்ன? என்பது பற்றி விசாரித்து வருகிற 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கும், போலீஸ் சூப்பிரண்டுக்கும் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.

.jpg)

.jpg)
.jpg)


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.