திருவண்ணாமலை:
ஆரணி அருகே ஊராட்சி தலைவர் கொலையில், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
.jpg?w=204&h=153&aspect=nostretch)
ஆரணி அடுத்த மருசூர் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி; தி.மு.க.,வை சேர்ந்தவர். கடந்த 22ம் தேதி வீட்டில் தூங்கிய சுந்தரமூர்த்தி, வெடிவிபத்தில் உடல் கருகி இறந்தார். ஆரணி போலீசார் விசாரணை நடத்தியதில், சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரை மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது குடும்ப பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
செந்தாமரையின் அக்காவுக்கு சுந்தரமூர்த்தியை திருமணம் நிச்சயம் செய்த நிலையில், அவரது அக்கா வேறு ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அதனால் வேறு வழியின்றி, செந்தாமரைக்கும், சுந்தரமூர்த்திக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
செந்தாமரைக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணமான சில நாட்களில் வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட அவர், தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து, கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (27) என்ற வாலிபருடன் செந்தாமரைக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தங்களுக்கு இடையூறாக இருந்த சுந்தரமூர்த்தியை கொலை செய்ய கள்ளக்காதலர்கள் திட்டமிட்டனர்.
கடந்த 22ம் தேதி இரவு, திருவிழாவில் வெடிக்கும் உயர்ரக வகை பட்டாசுகள், ஐந்து லிட்டர் பெட்ரோலை மதியழகன் வாங்கி வந்து செந்தாமரையிடம் கொடுத்தார். பட்டாசு, பெட்ரோல் கேன் ஆகியவற்றை சுந்தரமூர்த்தி படுக்கையின் கீழ் அவரது மனைவி வைத்து விட்டார். சென்னை சென்று வந்த சுந்தரமூர்த்தி, இரவு 11 மணிக்கு படுக்கைக்கு சென்றார். அதிகாலை வேளையில் அவர் அயர்ந்து தூங்கிய போது, கேனில் இருந்த பெட்ரோலை, அவரது படுக்கை அறையில் மதியழகன் ஊற்ற, செந்தாமரை தீ வைத்துள்ளார். பின் மதியழகன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
தீ வைத்தவுடன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. தீ கரும்புகை மூட்டத்துடன் இருந்ததால் அறையிலிருந்து சுந்தரமூர்த்தி தப்பி வெளியே வர முடியாமல் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரிந்தது.

வெடிவெடித்ததில் அவர் இறக்கவில்லை என்பதும், பெட்ரோல் தீ விபத்தில் அவர் இறந்திருப்பது பிரேதப் பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தாமரையையும், மதியழகனையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் செந்தாமரை கொடுத்த வாக்குமூலத்தில், “என் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லை. மதியழகனுடன் எட்டு மாதமாக கள்ளத்தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்தேன். இந்த சந்தோஷத்துக்கு, சுந்தரமூர்த்தி தடையாக இருப்பார் எனக் கருதி, அவரை மதியழகனுடன் சேர்ந்து கொலை செய்தேன்‘ என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.