திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.